Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
(நபியே! அவர்களிடம்) "நரகத்தின் நெருப்பு (இதைவிட) கொடிய உஷ்ணமானது" என்று நீங்கள் கூறுங்கள். (இதை) அவர்கள் புரிந்திருக்க வேண்டுமே! திருக்குர்ஆன்:- 9:81 நரகத்தின் மறுபெயர் தான் நெருப்பு. ஆம்! அங்கு இருக்கும் அனைத்தும் நெருப்புதான். உணவும் நெருப்பு; உடையும் நெருப்பு; பருகும் பானமும் நெருப்பு. அனைத்துமே நெருப்பாகி போன அந்த இடம். அதன் வாடை கூட நுகர முடியாதவாறு இருக்கும். நரகம் என்பது நிரந்தரமான வேதனைக்குரிய இடம். நரகம் என்பது மிகவும் கொடியது, யாராலும் அதனுடைய வேதனையை தாங்க முடியாது, நரகத்தில் பலவிதமான பயங்கரமான தண்டனைகளையும் அல்லாஹ் பாவிகளுக்கு தயார் செய்து வைத்துள்ளான். இந்த பயங்கரமான நரகத்தைப் பற்றி குர்ஆனும், நபிமொழிகளும் கடுமையாக எச்சரிக்கிறது. குர்ஆனில் நரகம் குறித்து 200 தடவைகளுக்கு மேல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழு வாசல்கள் அதற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலுக்கும் ஒதுக்கப்பட்ட பிரிவினர் அவர்களில் உள்ளனர். திருக்குர்ஆன்:- 15:44 இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நரகத்திற்கு ஏழு வாயில்கள் உள்ளன. அவை: 1) ஜஹன்னம் 2) லளா 3) அல்ஹுத்தமா 4) அஸ்ஸஈர் 5) சகர் 6) அல்ஜஹீம் 7) அல்ஹாவியா. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அல்ஹிஜ்ர் வசனம்-44 ஜஹன்னம் (9:81) லழா (70:15) சகர் (74:26-30, 40:47) அல்ஹுத்தமஹ் (104:4-9) ஜஹீம் (69:30-34) சயீர் (42:7) ஹாவியா (8:11) நரகம் ஏழு அடுக்குகளைக் கொண்டதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கும் மற்றதைவிட மிகக் கடுமையான வேதனை உள்ளதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கிலும் அதற்குத் தகுதியானவர்கள் தத்தமது செயல்களைப் பொறுத்து இருப்பார்கள். நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டிலிருப்பார்கள். அதுதான் மிகக் கடுமையான வேதனைக்குரியதாகும். இறைமறுப்பாளர்களுக்கு நரகத்தில் வேதனை இடைவிடாத நிரந்தர வேதனையாகும். அவர்கள் நரகில் கரிந்துவிடும் போதெல்லாம் வேதனையை அதிகப்படுத்துவதற்காக திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படுவார்கள். அவர்களின் தோல்கள் கரிந்திடும் போதெல்லாம் அவர்கள் வேதனை அனுபவிப்பதற்காக வேறு தோல்களை நாம் ஏற்படுத்துவோம். திருக்குர்ஆன்:- 4:56 எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது. அவர்கள் மரணம் அடையும் வகையில் அவர்களுடைய கதை முடிக்கப்படவும் மாட்டாது. நரகத்திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. இவ்வாறே நாம் எல்லா காஃபிர்களுக்கும் கூலி வழங்குவோம். திருக்குர்ஆன்:- 35:36 நரகத்தின் காவலாளியின் பெயர்: (வானவர்) மாலிக் (அலை) அவர்கள். திருக்குர்ஆன்:- 43:77 அச்சத்தால் அழுகை அபூநள்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அபூ அப்துல்லாஹ் என்றழைக்கப்படும் நபித்தோழரை நலம் விசாரிப்பதற்காக அவருடைய தோழர்கள் சென்றனர். அப்போது அவர் அழுதுகொண்டு இருந்தார். அதற்கான காரணத்தை வினவினர். அதற்கு அவர், "மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் தமது வலக்கையில் ஒரு பிடி மக்களையும் மற்றொரு (இடக்)கையில் மற்றொரு பிடி மக்களையும் பிடித்து, இந்த (வலக்கையிலுள்ள) மக்கள் சொர்க்கத்திற்காகவும் (மற்றொரு கையிலுள்ள) இந்த மக்கள் நரகத்திற்காகவும் படைக்கப்பட்டுள்ளனர். அது குறித்து நான் பொருட்படுத்த மாட்டேன்" என்று கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன். அந்த இரு பிடி(களில் உள்ள) மக்களில் எந்தப் பிடியில் அடங்குவேன். (அதாவது, சொர்க்கம் செல்லும் பிரிவினரிலா? அல்லது நரகம் செல்லும் பிரிவினரிலா?) என்று எனக்குத் தெரியாது" என்று கூறினார். நூல்:- முஸ்னது அஹ்மத், மிஷ்காத்-120 அதன் ஆழம் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நாங்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஏதோ விழுந்த சப்தத்தை அவர்கள் கேட்டார்கள். (நாங்களும் கேட்டோம்.) அப்போது நபியவர்கள், "இது என்ன (சப்தம்) என்று உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டார்கள். நாங்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று கூறினோம். நபியவர்கள்" இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்திற்குள் தூக்கியெறியப்பட்ட ஒரு கல்லாகும். அது இந்த நேரம்வரை நரகத்திற்குள் சென்று இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-5466 உத்பா பின் ஃகஸ்ஸான் (ரலி) அவர்கள் கூறியதாவது. உமர் (ரலி) அவர்கள் “நரகத்தைப் பற்றி அதிகமாக நினைவு கூறுங்கள். அதன் வெப்பம் மிகக் கடுமையானதாகும். அதன் ஆழம் மிகத் தொலைதூரம் கொண்டதாகும். அதன் சாட்டைகள் இரும்பாலானவை ஆகும்" என்று கூறுவார்கள். நூல்:- திர்மிதீ-2497 அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்நரகம், நரகவாசிகளின் சிலரை அவர்களின் கணுக்கால்கள்வரை தீண்டும். வேறு சிலரை அவர்களது இடுப்புவரை தீண்டும் . இன்னும் சிலரை அவர்களது கழுத்துவரை தீண்டும். காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுபோகப்படுகின்றனர். திருக்குர்ஆன்:- 40:46 பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமையில்) அவர் (தங்கப்போகும்) இருப்பிடம் காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக்காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால், சொர்க்கத்தில் இருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால், நரகத்தில் இருப்பதாகவும் (எடுத்துக்காட்டப்படும்.) அப்போது "இதுதான் உமது இருப்பிடம்; மறுமை நாளில் இதை நோக்கியே அல்லாஹ் உம்மை எழுப்புவான்" என்று கூறப்படும். கொடிய உஷ்ணமானது - புகட்டப்படும் உணவு பானம் (அவர்களை நோக்கி,) "இதோ! கொதித்த நீரும், சீழ் ஜலமும்! அதனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்). திருக்குர்ஆன்:- 38:57 அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நரகவாசியின்) வாய்க்கு அருகில் சீழ்நீர் கொண்டு செல்லப்படும். அப்போது அதை அவன் அருவருப்பாகக் கருதுவான். அது அவனுடைய வாய்க்கு இன்னும் நெருக்கமாக கொண்டு செல்லப்படும்போது, அவனுடைய முகத்தை அது கரித்துப் பொசுக்கும். அவனின் தலையில் உள்ள தோல் கழன்று கீழே விழுந்துவிடும். அதை அவன் அருந்திவிட்டாலோ, அது அவனுடைய குடல்களைத் துண்டு துண்டாக அறுத்துவிடும். இறுதியில் அது அவனுடைய ஆசன வாயின் வழியாக வெளியேறிவிடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நரகவாசிகளுக்கு புகட்டப்படும்) சீழிலிருந்து ஒரு வாளி அளவுக்கு பூமியில் கொட்டப்பட்டால்கூட உலகத்தார் அனைவருக்கும் அதன் நாற்றமடிக்கும். - திர்மிதீ-2506 அதில் அவர்களுக்கு(க் கருவேல) முட்களைத் தவிர, வேறொன்றும் உணவாகக் கிடைக்காது. (அது அவர்களுடைய தேகத்தை) கொழுக்கவும் வைக்காது; (அவர்களுடைய) பசியையும் தீர்த்து வைக்காது. திருக்குர்ஆன்:- 88:6,7 கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நரகவாசிகளுக்கு பசி ஏற்படுத்தப்படும். அது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் (மற்ற) வேதனைகளுக்கு நிகரானதாக இருக்கும். அப்போது அவர்கள் உணவு கேட்டு உதவி கோருவார்கள். அப்போது முட்செடியே அவர்களுக்கு உணவாக அளிக்கப்படும். அது (அவர்களை) கொழுக்கவும் வைக்காது; பசியையும் போக்காது. அவர்கள் மறுபடியும் உணவு கேட்டு உதவிகோருவார்கள். அப்போது அவர்களுக்கு விக்கிக்கொள்ளும் உணவையே வழங்கப்படும். அப்போது உலகில் விக்கிக்கொள்ளும்போது (தண்ணீர் போன்ற) பானத்தால் அதைச் சரிசெய்து கொண்டதை நினைவு கூறுவார்கள். எனவே, பருகுவதற்கு தண்ணீர் கேட்பார்கள். அப்போது அவர்களிடம் இரும்பு கிடிக்கியில் வைத்துக் கொதிநீர் கொடுக்கப்படும். அது அவர்களின் முகத்தருகே செல்லும்போது அவர்களின் முகம் பொசுங்கிவிடும். அந்த கொதிநீர் அவர்களின் வயிற்றுள் சென்றால், அவர்களின் வயிற்றிலுள்ள (குடல்கள் முதலிய)வற்றை துண்டாக்கிவிடும். அப்போது அவர்கள் (சிலர் சிலரிடம்) "நரகத்தின் காவலர்களை அழையுங்கள். (அவர்கள் நமக்காக இறைவனிடம் பிரார்த்திக்கட்டும்)" என்று கூறுவார்கள். (அவ்வாறே அவர்கள் அழைப்பார்கள்). அப்போது நரகத்தின் காவலர்கள், "உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளை உங்களிடம் கொண்டு வந்திருக்கவில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கு இவர்கள், "ஆம் (கொண்டு வந்தனர்)" என்பார்கள். "அப்படியானால் நீங்களே உங்கள் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். (ஆனால்,) இறைமறுப்பாளர்களின் வேண்டுதல்கள் தவறிப் போனதாகவே இருக்கும்" என்று கூறி விடுவார்கள். அப்போது நரகவாசிகள், "(நரகத்தின் காவலர்) மாலிக்கை அழையுங்கள்" என்பார்கள். "மாலிக்! உம்முடைய இறைவன் எங்கள் கதையை முடிக்கட்டும்" என்று கேட்பார்கள். அதற்கு மாலிக், "நீங்கள் இங்கேயே தங்கப் போகிறீர்கள்" என்று கூறுவார். திர்மிதீ-2508 அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நரக நெருப்பைப் போன்று (கடுமையான) எதையும் கண்டதில்லை. அதிலிருந்து விரண்டோட வேண்டியவன் உறங்கிக் கிடக்கிறான். - திர்மிதீ-2523 மிகவும் குறைவான வேதனை அருமை நாயகம் (ஸல்) வர்கள் கூறினார்கள். மறுமைநாளில் நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனையை அனுபவிப்பவர் ஒரு மனிதராவார். அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். அவற்றால் அவருடைய மூளை கொதிக்கும். - புகாரீ-6561 முஸ்லிம்-363, திர்மிதீ-2526 கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய தந்தையின் சகோதரர் அபூதாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபியவர்கள், “அவருக்கு என் பரிந்துரை மறுமைநாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரது (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள்வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவருடைய மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதிக்கும்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-6564 நரகத்தில், மனிதனின் தலையிலுள்ள மூளை மட்டும் கொதிப்பதே மிகவும் குறைவான வேதனையெனில், மிகவும் கடுமையான வேதனையை என்னவென்று சொல்வது? அதை யாராலும் தான் தாங்க இயலும்? அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! மறக்கடிக்கச் செய்துவிடும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வுலகில் செல்வச் செழிப்பாக வாழ்ந்த இறைமறுப்பாளர்களில் ஒருவர் மறுமை நாளில் கொண்டு வரப்படுவார். இவரை நரகத்தில் ஒருமுறை அமிழ்த்து எடுங்கள் என்று கூறப்படும். அதன்படி அவர் அதில் அமிழ்த்து எடுக்கப்படுவார். பின்னர் அவரிடம் "இன்னவரே! (உலக வாழ்வில்) எப்போதேனும் நீ இன்பம் நுகர்ந்திருக்கிறாயா?" என்று கேட்கப்படும். அதற்கு அவர், "இல்லை. ஒருபோதும் நான் இன்பம் நுகர்ந்ததில்லை" என்று கூறுவார். - முஸ்லிம்-5407, இப்னுமாஜா-4312 அதாவது அவர், ஒருமுறை நரகத்தில் அனுபவித்த வேதனையினால், உலகத்தில் தமது வாழ்நாளில் அனுபவித்த அனைத்து இன்பங்களையும் மறந்துவிடுவார். அதன் இரு மூச்சுகள் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நரகம் தனது இறைவனிடம், "என் இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே?" என்று முறையிட்டது. எனவே, இறைவன் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) "ஒரு மூச்சு குளிர்காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக, இரு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவை தாம் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும், குளிர் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான குளிரும் ஆகும்.- புகாரீ-537, முஸ்லிம்-1087, திர்மிதீ-2517, இப்னுமாஜா-4310 முஸ்னது அஹ்மத் தாங்க முடியாத கோடை காலமும், குளிர்காலமும் நரகம் வெளிப்படுத்துகின்ற மூச்சு காற்று என்றால், அதன் உட்புறம் எவ்வாறு இருக்கும்? அதன் வேதனையின் நிலையை கற்பனை செய்து கூட பார்க்க இயலாது. அதாவது நரகத்தில் கடுமையான வெப்பம் மட்டுமல்ல. தாங்க இயலாத கடுங்குளிரும் உண்டு என்பது தெளிவாகிறது. பிரமாண்டமாக இருப்பார்கள் சொர்க்கத்திலும், நரகத்திலும் எல்லா மனிதர்களும், ஜீவராசிகளும் பொருள்களும் எல்லாம் மிகப் பெரிய அளவில் இருக்கும். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரம் கொண்டவர்களாயிருப்பார்கள். - புகாரீ-3327, முஸ்லிம்-5450 பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சொர்க்கத்திலுள்ள 'சித்ரத்துல் முன்தஹா' எனும்) அந்த (இலந்தை) மரத்தின் கிளைகளின் நிழலில் (விரைவாகப்) பயணிப்பவர் நூறு ஆண்டுகள் பயணிப்பார். அல்லது அதன் நிழலில் நூறு பயணிகள் நிழல் பெறுவர். அந்த மரத்தின் பழங்கள் (யமன் நாட்டில் உள்ள 'ஹஜர்' பகுதியில் உற்பத்தியாகும் மண்) கூஜாக்கள் போன்று (பெரியவையாக) இருக்கும். - திர்மிதீ-2464 நபி (ஸல்) அவர்கள், “உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்” என்று கூறினார்கள். உடனே, “நாயகமே! இந்த உலக நெருப்பு (பாவம் செய்தவர்களை எரித்து) வேதனைப்படுத்த போதுமானதாயிற்றே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “(அப்படியல்ல) உலக நெருப்பைவிட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்கு சமமானதாகும்” என்றார்கள். - புகாரீ-3265, முஸ்லிம்-5465 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதன் பற்றவைக்கும் (பூமியிலுள்ள) இந்த நெருப்பானது, நரக நெருப்பிலுள்ள வெப்பத்தின் எழுபது பாகங்களில் ஒரு பாகமாகும். - முஸ்லிம்-5465, திர்மிதீ -2511 கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நரகத்தில்) இறைமறுப்பாளனின் “கடவாய்ப்பல்’ அல்லது “கோரைப்பல்’ உஹுத் மலையைப் போன்றிருக்கும். அவனது தோலின் பருமன் மூன்று நாள் நடைப் பயணத் தொலைவுடையதாக இருக்கும். - முஸ்லிம்-5479 அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நரகத்தில் இறைமறுப்பாளனின் இரு தோள்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாக வாகனத்தில் பயணிப்பவர் மூன்று நாட்கள் கடக்கும் தூரமாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5480 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்டபடி, "இவ்வுலகில் உள்ள நெருப்பே மனிதனை சுட்டுப்பொசுக்க போதுமானதாகும், இப்படி இருக்க அறுபத்தொன்பது மடங்கு அதிகமுள்ள கொடும் நெருப்பின் தேவை என்ன? உலகில் வாழும் மனிதர்களின் சராசரி உயரம் 5 அடி, எடை 80 கிலோ இருக்கிறார்கள். இந்தளவுள்ள மனிதர்களை நெருப்பில் இட்டு வேதனை செய்ய உலக நெருப்பு போதும். ஆனால் மறுமையில் எழுப்பப்பட்டு இறுதித் தீர்ப்புக்குப் பின் நரகம் செல்லும் நரகவாசிகளின் உடம்பு, பூமியில் இருந்தது போல் சராசரி ஐந்தடி உயரம் எண்பது கிலோ எடையில் இருக்காது. அவர்கள் பிரமாண்டமாக இருப்பார்கள். நரகவாசிகளின் உடல், கொடும் வெப்ப வேதனையை நன்கு ருசிப்பதற்காக அல்லாஹ்வால் பிரமாண்ட மாமிச மலையாக மாற்றப்பட்டே நரகில் தள்ளப்படுவார்கள். நரகில் உள்ள மாமிசமலை மனிதர்களுக்கு பூமியில் உள்ள வெப்பம் போதுமானதாக இருக்க முடியாது. காரணம் இவர்களின் தோலின் கனமே மூன்று நாள் பயண தொலைவு இருப்பதால் பூமியில் இருக்கும் நெருப்பை விட எழுபது மடங்கு கடும் சூடு கொண்ட நெருப்பு தேவையாக உள்ளது. மேலும் சொர்க்க, நரகவாசிகளுக்கு மீண்டும் ஒரு மரணம் இல்லை. ஆகவே நரகவாசிகள் கொடும் நெருப்பால் சுடப்பட்டு பஸ்பமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே மிக கனமான தோல் போர்த்தப்பட்டு, இறப்பில்லா நீடித்த வேதனை அனுபவித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் தோல்கள் கருகி வலியுணர்ச்சி குறையும்போது மீண்டும் புதுத் தோல் மாற்றப்பட்டு வலி வேதனையை தொடர்ந்து உணர்ந்து கதறுவார்கள். அதில் அவர்கள் திணறித் திணறிக் (கழுதையைப் போல்) கதறுவார்கள். (மற்றெவரின் சப்தமும்) அவர்கள் காதில் விழாது. திருக்குர்ஆன்:- 21:100
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry